“சூர்யா-45” படத்திற்கு ஆர்.ஜே.பாலாஜி தேர்வானது எப்படி?
சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா. சூர்யா 44 என்றழைக்கப்படும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சூர்யாவின் 45 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 14 வெளியானது.
அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்… தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும் ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தைப் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலையில் பெயரிடப்படாத இந்தப் படம், தயாரிப்பு நிறுவனத்தின் புகழ்பெற்ற பட வரிசையில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகும் படமாக இருக்கும். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற நகைச்சுவை மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய படங்களை இயக்கிய, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த பிரம்மாண்டமான ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி வரும், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது சூர்யா 45 படத்தின் முன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆர்.ஜே.பாலாஜியின் திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஏ.ஆர்.ரகுமானும் சூர்யாவும் இதற்கு முன்பு ’சில்லுனு ஒரு காதல்’, ’ஆயுத எழுத்து’ மற்றும் ’24’ போன்ற கிளாசிக் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர்-, இசையமைப்பாளர் ஜோடியின், இந்தப் புதிய படத்தின் பாடல்களும் இசை ஆர்வலர்களின் மத்தியில் ஆட்சி செய்யும் என இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இந்த மதிப்புமிக்க திரைப்படத்திற்காக, பல திறமையான பிரபல கலைஞர்களை இப்படத்தில் இறுதி செய்து வருகின்றனர்.
நவம்பர் 2024 இல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் “சூர்யா 45” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநராக ஆர்.ஜே.பாலாஜி தேர்வு செய்யப்பட்டது ஏன்? என்கிற கேள்விகள் எழுந்து வருகின்றன. அதற்கான விடை ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதை எழுத வருடக் கணக்கில் நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால் படப்பிடிப்பை எழுபது முதல் எண்பது நாட்களுக்குள் முடித்துவிடுவார். சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்து இவ்வளவு விரைவாகப் படத்தை எடுத்து முடித்துவிட்டாலே அப்படத்தில் இலாபம் பார்த்துவிடலாம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முந்தைய படமான சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு சுமார் தொண்ணூறு நாட்கள் இருக்கும் என்று சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பத்து நாட்கள் முன்னதாக அதாவது எண்பது நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
ஆர். ஜே. பாலாஜியும் படப்பிடிப்பு நாட்கள் குறித்து கொடுத்த உறுதிமொழி காரணமாகவே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.