“கூரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றதது.

விழாவில், சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமைகள் செயல்பாட்டாளரும் , த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் நிறுவனருமான  மேனகா சஞ்சய் காந்தி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும் போது,

இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட படக்குழுவினர்  அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தத் திரைப்பட விழாவுக்கு என்னை அழைத்த போது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன்.

திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது.
உயிரினம் ஒவ்வொன்றும் சோகத்தை உணர்கிறது, மகிழ்ச்சியை உணர்கிறது, பயத்தை உணர்கிறது, வாழ விரும்புகிறது, அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறது. இந்தப் படத்தில் நாய்களைப் பற்றிப் பேசுவதால் நாய்களில் இருந்து தொடங்குவோம்.

நான் பிறந்ததிலிருந்து என் வாழ்க்கையை விலங்குகளுடன் கழித்து வந்திருக்கிறேன்.
நாய்கள் பேசுவதை நான் கண்டிருக்கிறேன், நாய்கள் மட்டுமல்ல. பூனைகள், கோழிகள், பாம்புகள், பன்றிகள், கழுதைகள் இவை அனைத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. அவை அனைதுமே மனிதர்களைப் புரிந்து வைத்துள்ளன. ஆனால் நாம் தான் அவைகளைப் புரிந்து கொள்வதில்லை.

நான் உங்களுக்குச் சில சம்பவங்களைக் கூற விரும்புகிறேன். மசூரியில் உள்ள ஒரு பள்ளிக்கு ஒரு தொடக்க விழாவுக்கு நான் சென்றிருந்தேன். நான் ஒரு மனிதருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தபோது, விலங்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். அது ஒரு பெரிய சாலை. அது அவரது வீட்டிற்கு சுமார் 400 மீட்டர் தொலைவில் இருக்கும். அவரது நாய் தனது இணையுடன் அங்கே நின்று கொண்டிருந்தது. இதற்கு முன் நான் அவற்றைச் சந்தித்ததே இல்லை. அவை இப்போதுதான்  எனக்குப் பாதுகாப்பாக என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தன. நான் அவரிடம் சொன்னேன், உங்கள் நாய் காலையில் தனது பாதத்தை காயப்படுத்தியதாகக் கூறுகிறது, அதற்கு மிகவும் வலிக்கிறது, யாரையும் அதைத் தொட அனுமதிக்கவில்லை என்று.

அந்த மனிதர், இந்த முட்டாள்தனத்தை நான் நம்பவில்லை என்றார். நாங்கள் அவரது வீட்டிற்குச் சென்றோம், அவர் தனது மனைவியிடம் பேசினார். அவரது மனைவி சொன்னார், உங்களுக்குத் தெரியும், உங்கள் நாய் காலையில் இருந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது. காலில் காயம்பட்டு இருந்தது கட்டுப் போடக் கூட விடவில்லை என்றார்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான அனுபவங்கள் எனக்கு உண்டு.

மரியா என்று ஒரு பெண்மணி இங்கிலாந்தில் இருந்து  வந்திருந்தார். அவர் ஒரு புத்தகம் கூட எழுதி இருக்கிறார். அவரால் விலங்குகளுடன் பேச முடியும், பேச முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடியும். இதைச் சொல்வதற்காக இந்தியா வந்திருந்தார். நான் அவரை எனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அது இந்தியாவின் முதல் விலங்கு மருத்துவமனைகளில் ஒன்று. ஒரு பசு அவர் அருகில் வந்தது, பசுவின் தலையில் கையை வைத்தார். பின்னர் அவர் என்னிடம் சொன்னார், பசு நன்றி சொன்னது என்று. அது ஒரு விபத்தில் சிக்கியபோது  நீங்கள் அதனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தீர்கள். அது இப்போது நன்றாக இருக்கிறது. ஆனால் அதன் தலையில் தாக்கப்பட்டதால், அதற்கு இன்னும் தலைவலி வருகிறதாம். ஏதாவது மருந்து இருக்கிறதா ?என்று  கேட்டார்.

பின்னர் ஆபரேஷன் மேஜையில் படுத்திருந்த ஒரு நாயிடம் சென்றோம். அதன் கால்கள் அனைத்தும் உடைந்துவிட்டன. நாய் அந்தப் பெண்ணிடம் இன்று காலை, மிஸஸ் காந்தி மருத்துவரிடம், வலி இருப்பதால் அதனால் நிற்க முடியாது, அதைத் தூங்க வைப்போம் என்றாராம் அதற்கு டாக்டர், முடியாது என்றாராம். இதையெல்லாம் அந்த நாயிடமிருந்து புரிந்து கொண்டு அவர் கூறினார்.

நான் முதல் முதலில் தேர்தலில் நின்ற போது, நான் ஒரு கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு மோசமான வாசனை வந்தது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. ஏதேனும் ரசாயனங்கள் உள்ளதா, கழிவுநீர் உள்ளதா, வேறு ஏதாவது இருக்கிறதா என்று நான் தேடிக்கொண்டிருந்தேன். மேடையின் அருகே ஒரு கழுதை நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதன் உடல் முழுவதும் சீழ் நிரம்பி, அழுகிக் கொண்டிருந்தது போல் ஒரு நிலை. எனவே நான் கூட்டத்தை விட்டு வெளியேறினேன். அதை வீட்டிற்குக் கொண்டு சென்றேன், மருத்துவரை அழைத்தேன், சீழைத் துடைத்து, ஆண்டிபயாட்டிக் கொடுத்தோம். மெல்ல மெல்ல சரியானது. பிறகு அது மருத்துவரைச் சந்திக்க விரும்பவில்லை. மருத்துவரைப் பார்த்தால் மரத்தின் பின்னே ஒளிந்து கொள்ளும். அங்கிருந்து வெளியே செல்ல விரும்பியது. தயவுசெய்து போங்கள் என்று கொடுத்த இரைகளை எட்டி உதைத்தது. ஒரு நாள் இரவு, அது முற்றிலும் குணமான தருணத்தில் அது பாடியது. அந்த இரவு என் வாழ்நாளில் மறக்க முடியாத இரவு என்று சொல்வேன். அந்தக் கழுதை வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்து பாடுவது போல் ஒரு பாட்டு பாடியது. அது ஒரு அருமையான இசை போல் எனக்கு இருந்தது.  அது இசைத்த பாடல் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி என்று நட்சத்திரங்களைப் பார்த்து கூறுவது போல் இருந்தது. விலங்குகளின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பார்க்கும் போது , அது நம்முடையதாக உணர வேண்டும். நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான் இந்தப் படம் முழுமையாக வெளிப்படுத்துகிறது.

ஒருமுறை நான் எனது தொகுதியில் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய நீண்ட கறுப்பு பாம்பு கடந்து கொண்டிருந்தது. நாங்கள் பயணத்தைத் தொடராமல் நிறுத்தி, காத்திருந்தோம், பாம்பு கடந்து சென்றது. பாம்புகளால் நன்றாகப் பார்க்க முடியாது. அவற்றால் கேட்கவே முடியாது. ஒரு இரவில், நான் தூங்கச் சென்றபோது, ஒரு பாம்பு வந்து என் படுக்கையின் கீழ் இரவு முழுவதும் இருந்து விட்டு காலையில் போய்விட்டது. அது உங்களைப் போலவே தூங்க வந்ததைப் போல இருந்தது.  இப்படி என் வாழ்க்கையில் நிறைய உண்டு.

நீங்கள், நான், அது, உங்கள்  காலடியில் செல்லும் எறும்பு ஆகியவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
கோழிகளுக்கு ஒரு முழுமையான அகராதி உண்டு. அவற்றுக்கான, ஒரு மொழி உள்ளது. கோழிகள்,  திருமணம் செய்து கொள்கின்றன. பிள்ளைகள் குடும்பம் என்று ஒன்று உண்டு. ஆண் கோழிகளுக்கு மனைவியைப் போல பெண் தோழிகளும் உண்டு. மனைவிக்கும் பெண் தோழிக்கும் சண்டை வருவதுண்டு. பொய்கள் சொல்வதும் உண்டு. இந்தப் படம் நாயின் உரிமை  வழக்கு பற்றிப் பேசுகிறது.

நான் எப்போதும் பார்க்கிற குழந்தைகளிடம் சொல்வது போல் உங்களுக்கும் சொல்கிறேன். மும்பையில் ஒவ்வொரு நாளும் நாய்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதை யாரும் நிறுத்த முடியாது. சாலைகளில் அவற்றின் மீது வாகனங்கள் மோதி பல நாய்கள் காயம்படுகின்றன, பலவும் இறக்கின்றன. நாயின் மீது வண்டி ஏற்றிய மனிதருக்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அது பெரிய விஷயம் இல்லை என்றதுடன் அந்த வழக்கைக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக நீதிபதி பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இது நான் இதுவரை கண்டிராத மிகவும் பயங்கரமான தீர்ப்பாகும்.

நான் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இதுபோல ஏராளமான விலங்குகளுக்கு எதிரான தாக்குதல் பிரச்சினைகள் வருகின்றன. இந்தப் படம் அந்த நீதிபதிக்கு மட்டும் காட்டப்படாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அனைத்து நீதிபதிகளுக்கும் காட்டப்பட வேண்டும்.

எஸ். ஏ. சந்திரசேகரன் இந்தப் படத்தைப் பல்வேறு மொழிகளில் வெளியிடுவார் என்று நம்புகிறேன். மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விலங்குகள் நல இயக்க மக்களையும் இதைப் பார்க்கச் சொல்கிறேன். அவர்களை விட நாம் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பார்க்க வேண்டும். உயிரினங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். விலங்குகள் மீது போர் தொடுப்பதை நிறுத்தும் வரை, நமக்குள் அமைதி இருக்காது. அனைத்து உயிரினங்களும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. இது ஒரு பிரச்சார படம் அல்ல, கலகலப்பான படம். மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம். இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு முக்கியமான யோசனை. இந்த அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றார்.

இந்தப் பட விழாவில் இயக்குநர்கள் எஸ் .ஏ. சந்திரசேகரன், திருமதி ஷோபா சந்திரசேகரன், எம். ராஜேஷ் பொன்ராம், நடிகர்கள் ஒய். ஜி. மகேந்திரன், விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, விமலா பிரிட்டோ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், தொழிலதிபர் சுந்தர்,
தயாரிப்பாளர் விக்கி, படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தில் பிரதான வேடம் ஏற்றுள்ள நாய் ஜான்சியும் கலந்து கொண்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button