“நேசிப்பாயா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ பேசுகையில், எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ. அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார், குஷ்பு, அதிதி என படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆகாஷின் அறிமுகப் படம் இது. படத்தில் யுவனின் இசை இன்னொரு ஹீரோ. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், மாஸ்டர்’ தந்து மாஸ்டராக விளங்கி வருபவர் சேவியர் பிரிட்டோ. அவரின் மகள் சிநேகா இந்தத் தொழிலின் அத்தனை நுணுக்கங்களையும் கற்று ‘நேசிப்பாயா’ படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் மூலம் நல்ல கதாநாயகனாக ஆகாஷ் முரளி அறிமுகமாகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். யுவனின் இசை நிச்சயம் இளைஞர்களைக் கவரும். வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கு வந்திருக்கிறார் விஷ்ணு வர்தன். நிச்சயம் படம் வெற்றியடையும் என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், முரளி எனக்கு நல்ல நண்பர். அவரின் மகன் படத்தின் விழாவிற்கு வந்திருக்கிறேன். படத்திலும் முக்கியமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். யுவன் இசையில் முதல் முறையாக நடித்திருக்கிறேன். ஆகாஷூக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. ‘நேசிப்பாயா’ படத்தை நிச்சயம் நீங்களும் நேசிப்பீர்கள் என்றார்.

இயக்குநர் இளன் பேசுகையில், “நேசிப்பாயா’ படத்தை நான் பார்த்துவிட்டேன். அருமையாக வந்திருக்கிறது. ஆகாஷிடம் இயல்பாகவே ஒரு இன்னொசண்ட் இருக்கிறது. அது இந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தி வந்திருக்கிறது. அதிதியும் நன்றாக நடித்திருக்கிறார். பல லொகேஷனில் ஸ்டைலிஷாக விஷ்ணு இயக்கி இருக்கிறார். விஷ்ணு- யுவன் காம்போ மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர்கள் சிநேகா மற்றும் பிரிட்டோ கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

நடிகர் அதர்வா முரளி பேசுகையில், ’நேசிப்பாயா’ படம் எங்களுக்கு நெருக்கமான படம். ஆகாஷின் அறிமுகப் படம் இது. இதற்காக பிரிட்டோ மற்றும் சிநேகாவுக்கு நன்றி. கதைக்கு மகிழ்ச்சியுடன் செலவு செய்வார் பிரிட்டோ. விஷ்ணு வர்தனின் ஹீரோ ஆகாஷ் என்பது எங்களுக்கு பெருமையான விஷயம். அதிதி சிறப்பாக நடித்திருக்கிறார். என் முதல் படத்தில் நடந்த லக் என் தம்பிக்கும் அவரின் முதல் படத்தில் நடந்திருக்கிறது. ஆமாம்! ஆகாஷின் முதல் படத்திற்கும் யுவன் தான் இசை. நிச்சயம் படம் வெற்றி பெறும். விழாவிற்கு வருகை தந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சரத் சாருக்கும் நன்றி. ஜனவரி 14 அன்று படம் வெளியாவது மகிழ்ச்சி. மகன்களின் கனவை தன் கனவாக நினைக்கும் அம்மாக்களில் எங்கள் அம்மாவும் ஒருவர். அவரது வாழ்த்து நிச்சயம் ஆகாஷூக்கு உண்டு. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை அதிதி ஷங்கர் பேசுகையில், இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தேன். இன்னும் பத்து நாட்களில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விஷ்ணு வர்தனுக்காகதான் கதை கூட கேட்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். விஷ்ணு சாரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்தார். ’விருமன்’ படத்தின் போது முழுக்கதையும் எனக்கு கொடுத்தார்கள். ‘மாவீரன்’ படத்தில் நடிக்கும் போது ஒருநாளுக்கு முன்பாக எனக்கு காட்சிகளை பிடிஎஃப்பில் அனுப்புவார்கள். விஷ்ணு எனக்கு இரண்டு முறை கதை சொன்னார். பின்பு, ஷூட் சென்று விட்டோம். ஆன் தி ஸ்பாட்டில்தான் எனக்கு வசனம், காட்சி சொல்வார் விஷ்ணு. நிறைய கற்றுக் கொண்டேன். ஆகாஷின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். என் முதல் விருது சிவகார்த்திகேயன் கையால்தான் வாங்கினேன். இரண்டாவது படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவிற்கு அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம் என்றார்.

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், சிநேகாவுக்கு அவரது கணவரை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது கனவு ‘நேசிப்பாயா’ படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. என் நண்பர்கள்தான் விஷ்ணுவும் அனுவும். விஷ்ணுவின் ஸ்டைலிஷான இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகமாகிறார். அதிதியும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொங்கலில் வெளியாகும் இந்தப் படத்திற்கு வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், நாங்கள் எல்லோரும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதை கேட்டதில் இருந்து நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகாஷ், அதிதி அழகாக நடித்திருக்கிறார்கள். நானும் விஷ்ணுவும் பள்ளிக் காலத்தில் இருந்தே ஒன்றாக பணிபுரிகிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் பேசுகையில், சரத்குமார், அழைத்ததும் வருவதற்கு உடனே ஒத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் இருவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தின் ஜானர் இதற்கு முன்பு நான் முயற்சி செய்யாதது. அதனால், நீங்கள் எப்படி வரவேற்பு கொடுக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த பிரிட்டோ  மற்றும் சிநேகா பிரிட்டோவுக்கு நன்றி. ஆகாஷ் முதல் நாளிலிருந்து ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். சரத், குஷ்பு, கல்கி, ஸ்ரீகர் என இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. அழைப்பை ஏற்று வந்த விஜய் ஆண்டனிக்கும் நன்றி. அதிதியின் நடிப்பு என் இதயத்தை தொட்டுவிட்டது. யுவனின் இசை என் படத்திற்கு பெரும் பலம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஆகாஷ் முரளி பேசுகையில், நிகழ்வு முழுவதும் இருந்து எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ மற்றும் சிநேகா பிரிட்டோவிற்கு நன்றி. என் மேல் நம்பிக்கை வைத்த என் குரு விஷ்ணுவர்தனுக்கு நன்றி. அற்புதமான அனுபவமாக இந்த படம் இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். அற்புதமான பாடல்கள் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. அதிதி, சரத், கல்கி எல்லோருக்கும் நன்றி. அண்ணா, அம்மா, அக்கா எல்லோருக்கும் நன்றி. என் தாத்தாவும் அப்பாவும் என்னையும் என் அண்ணனையும் சினிமாவில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள். படம் ஜனவரி 14 அன்று வெளியாகிறது என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணு வர்தன் தான். பிரிட்டோ மிக நல்ல மனிதர். நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள். என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் ! தொலைக்காட்சியில் ஆங்கரிங் பண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய கனவை அடையவும் மனோகர் மாமா ஆதரவு கொடுத்தார். அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறார். யுவன் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. விஷ்ணு இயக்கியிருக்கிறார் என்பதற்காகவே அவருடைய படங்களைத் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால் முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள். அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத் சாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும். யுவன் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார். யுவன்- முத்துக்குமார் காம்பினேஷனை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன். இன்னும் நிறைய நல்ல பாடல்கள் நீங்கள் கொடுக்க வேண்டும். ஜனவரி 14 பொங்கல் அன்று தியேட்டரில் இந்தப் படம் பாருங்கள். எல்லாப் படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button