மதுரை மண்வாசனையுடன் “கௌதம் கார்த்திக்” “சரத்குமார்” இணையும் ஆக்ஷ்ன், திரில்லர் திரைப்படம்.!
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சமீபத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியான, ஆதி பினிசெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் நடிப்பில், இளையராஜாவின் இசையமைப்பில் பிருத்திவி ஆதித்யாவின் இயக்கத்தில் உருவான (தமிழ் மற்றும் தெலுங்கு), இருமொழித் திரைப்படமான “கிளாப்” மிக அற்புதமான வரவேற்பை பெற்றதில் தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். தற்போது, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புகழ்பெற்ற பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனர், தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தவருமான,
திரிபுரா கிரியேஷன்ஸ் முரளிகிருஷ்ணா வங்கயாலபதி உடன் கைகோர்த்து புதிய தமிழ் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். தற்போது திரிபுரா கிரியேஷன்ஸ் நிறுவனம் டாக்டர் ராஜசேகரின் “சேகர்” படத்தை தயாரித்து வருவது குறிப்பிடதக்கது.
இந்த தயாரிப்பாளர்கள் இணைந்து, கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மதுரை பின்னணியில் ஆக்சன் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் CS இசையமைக்கிறார்.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், திரிபுரா கிரியேஷன்ஸ்,தாரா சினிகார்ப் ஆகிய மூன்று நிறுவனங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில், அடுத்தடுத்து பெரிய பட்ஜெட்டில் பல நல்ல திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளன, அதில் முதலாவதாக பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் புரடக்சன் நம்பர்: 9 திரைப்படம் மே 2022 முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்சன் நிரம்பிய இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம், திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய விருந்தாக இருக்கும். படத்தின் இயக்குனர், தட்சிணாமூர்த்தி ராமர் கூறும்போது, “கௌதம் கார்த்திக், சரத்குமார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், திரையுலகில் சரத்குமாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை.
நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போது கூட, சரத்குமாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை, கதையை விவரித்தவுடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஆச்சர்யம் தந்தார்.
சரத் குமாரின் கதாப்பாத்திரம் குறித்து மேலும் கூறுகையில், “இதுவரை சரத்குமார் சார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தப்படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக, மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல்மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாக நடிக்கவுள்ளார்.