திரையுலகம் கொண்டாட வேண்டிய படம் “இரவின் நிழல்” – ஏ.ஆர்.ரஹ்மான்
உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் பார்த்திபனின் “இரவின் நிழல்”. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா, பத்திரிகை, ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர் இராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி சந்துரு, இயக்குனர்கள் எழில், சசி, சமுத்திரகனி, த.செ. ஞானவேல், எழுத்தாளர் அஜயன் பாலா, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் சிறப்புக்களை பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் பார்த்திபன் பேசும்போது … ஏ.ஆர். ரஹ்மானுடன் ஏலோலோ படத்தில் வேலை செய்ய வேண்டியது. அந்த படம் நடக்கவில்லை. அவருடன் வேலை செய்ய 20 வருடம் காத்திருந்தேன். இந்தப்படம் அவர் இருந்ததால் மட்டுமே சாத்தியம். அவர் இருக்கும் தைரியத்தில் தான் இந்த முயற்சியை செய்தேன். இந்த முயற்சி செய்ய ஆரம்பித்த போது எல்லோரும் முடியாது என்றார்கள் ஏன் முடியாது என முயற்சித்தது தான் இந்தப்படம். இதன் கதை சொன்னவுடனே அவரே “பாவம் செய்யாதிரு மனமே” என ஒரு சித்தர் பாடலை இசையமைத்து தந்தார். எப்படி படத்திற்கு முன்னதாக படத்திற்கு பொருத்தமாக ஒரு பாடலை தந்தார் என ஆச்சர்யமாக இருந்தது. இந்த கதைக்கு முழுக்க முழுக்க அவர் இசையால் உயிர் தந்துள்ளார், ஒரு பாடல் இருந்த இந்தப்படத்தில் ஆறு பாடல்கள் ஆகிவிட்டது. இந்தப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். எல்லோரது பாராட்டும் ஊக்கமும் தான் இந்தப்படம் எடுக்க காரணம் என்றார்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பேசும்போது… இயக்குநர் பார்த்திபன் சொல்லி இந்த கதை கேட்டபோது பிரமிப்பாக இருந்தது. அவரிடம் சினிமா மீதான காதல் இன்னும் இருக்கிறது. அவர் இந்த ஐடியா சொன்ன போது பைத்தியகாரத்தனமாக இருந்தது. இவ்வளவு நன்றாக செய்வார் என நினைக்கவில்லை. மிக நன்றாக எடுத்தார். நான் ஒரு படம் எடுத்தேன் 99 சாங்ஸ் ஆனால் அதை சரியாக ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்தப்படம் எடுக்கும்போது ஷீட்டிங் ஸ்பாட்டில் எப்படி எடுக்கிறார்கள் என பார்த்தேன் பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் வெளிநாட்டில் வெளியாகி இருந்தால் கொண்டாடி இருப்பார்கள் பரவாயில்லை இங்கு தமிழ் நாட்டில் கொண்டாடுவோம் என்றார்.