பதவிக்கு ஏற்ற பொறுப்பு… பொறுப்புக்கு ஏற்ற உழைப்பு… துணை முதல்வர்..!
திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலைஞருக்கு ஸ்டாலின் எவ்வளவு உற்ற துணையாக இருந்தாரோ, அப்படி ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். திரை கலைஞர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல பணிகளைக் கடந்து வந்திருந்தாலும், அதற்கெல்லாம் முன்பாகவே அவரது நிர்வாக திறன் என்பது கலைஞரால் அங்கீகரிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலேயே தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியை நிர்வகிக்கும் பொறுப்பினை உதயநிதிக்கு வழங்கினார் கலைஞர். அதற்கு அடுத்த கட்டமாக கட்சிப் பணிகளில் களத்தில் இறங்கி செயல்பட தொடங்கினார். ஒரு தொண்டராக கட்சி நிர்வாகிகளிடம் சேர்ந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். இவரது எளிமையான மக்களை கவரும் வகையிலான பிரச்சாரம், திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியே, உதயநிதிக்கு பதிலளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். அவரது அணுகுமுறையும், பேச்சும் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்துப் போனது. அவர் சென்ற இடங்களிலெல்லாம் கூட்டம் அலைமோதியது. கூடிய கூட்டமெல்லாம் ஓட்டாக மாறியது.
2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 37 மக்களவைத் தொகுதிகளையும், 13 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக. அவரது பிரச்சார உத்திகளும், உழைப்பும் திமுகவுக்கு பெரும் பலமாக அமைந்தது. அந்த பலம் தொடர வேண்டுமானால், திமுகவிற்கு உதயநிதி வேண்டும் என்ற சூழல் உருவானது. இதனை உணர்ந்த திமுக மாவட்ட செயலாளர்களும், இளைஞரணி நிர்வாகிகளும் உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி வேண்டுகோள் வைத்தனர். இதனைத் தொடர்ந்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பை திமுக தலைமை உதயநிதிக்கு வழங்கியது. பதவியல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து திமுகவின் வெற்றிக்காகவும் திராவிட இயக்க கொள்கைகளுக்காகவும் பாடுபடுவேன் என உதயநிதி தெரிவித்தார்.
பதவிக்கு ஏற்ற பொறுப்பும், பொறுப்புக்கு ஏற்ற உழைப்பும் உதயநிதியின் செயல்பாடுகளில் அதிகரித்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களையும், திட்டங்களையும் எதிர்த்து அவரது குரல் ஓங்கி ஒலித்தது. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில், பின்தங்கிப் போன தமிழ்நாட்டை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற வேட்கை அவரிடம் தெரிந்தது. அதற்கான ஒரு களமாக அமைந்தது 2021 சட்டமன்றத் தேர்தல். திமுக வேட்பாளர்கள் மட்டுமல்லாது, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் சுற்றுச் சூழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 100 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் உதயநிதியின் குரல் ஒலித்தது.
உதயநிதியின் ஒற்றைச் செங்கல் புரட்சி, தமிழக அரசியல் களத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கும் மத்திய அரசை கண்டித்து, ஒற்றைச் செங்கலை வைத்து அவர் செய்த பிரச்சாரம் இளைஞர்களிடையே ட்ரெண்டிங் ஆனது. சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டிருந்த உதயநிதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட நான்கு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார். அன்று முதல் அவர் சேப்பாக்கத்தின் செல்லப் பிள்ளை ஆனார். அவரின் எளிமையும், மக்களிடம் குறைகளை கேட்டு அதனை உடனே நிவர்த்தி செய்யும் வேகமும், மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்தது.
கொரோனா மூன்றாம் அலையில் இக்கட்டான சூழலில் திமுக ஆட்சிக்கு வந்தது. கொரோனாவில் இருந்து மீள்வதற்காக மருத்துவ முகாம்கள் நடத்தினார். உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள தனது தொகுதியில், ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு மூன்று வேளை உணவளித்து அவர்களின் பசியை போக்கினார். பருவ மழையினால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களுக்கு, வீடு வீடாகச் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். மக்களைக் காப்பாற்ற மருத்துவ முகாம், இளைஞர்களுக்கு கை கொடுக்க வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தினார்.
சாக்கடைகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் வலியை உணர்ந்த உதயநிதி, தன்னுடைய அறக்கட்டளையின் மூலமாக தனது தொகுதிக்கு சாக்கடை அள்ளும் நவீன இயந்திரத்தை வாங்கி கொடுத்து, துப்புரவு தொழிலாளிகளின் வலியைப் போக்கினார். தொகுதிப் பணிகளோடு தன்னுடைய கடமை முடிந்தது என நினைக்கவில்லை. அவர் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக கட்சியின் கொள்கைகளையும், கட்சியின் கலப் பணிகளையும் மேற்கொள்ளும் கடமையைச் செய்ய தவறியதில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையான வெற்றியைக் கண்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொடர் சாதனைகளுக்கு மற்றுமொரு மகுடமாக அந்த வெற்றி அமைந்தது. அந்த சாதனை வெற்றிகளுக்கு உதயநிதியின் பிரச்சாரமும், உழைப்பும் பெரும் ஆதரவாக இருந்தது.
திராவிட கொள்கைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் வகையில், திமுக இளைஞரணி சார்பாக மாவட்டம் தோறும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தி, பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட சித்தாந்தங்களை திராவிட ஆய்வாளர்கள், வல்லுநர்கள் வாயிலாக இன்றைய இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியை செய்து காட்டினார். நீட் அநீதிக்கு எதிராக மிகப்பெரிய கையெழுத்து இயக்கத்தை நடத்தி, தமிழ்நாட்டு மக்களின் மன உணர்ச்சியை வெளிக்கொண்டு வந்தார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மாநிலங்களுக்கு எதிரான மத்திய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
திராவிட சித்தாந்தத்தையும், திராவிட தலைவர்களின் வரலாற்றையும் இன்னும் அடுத்த தலைமுறையினருக்கு நேரடியாக கொண்டு செல்லும் வகையில், என் உயிரினும் மேலான என்ற பேச்சுப் போட்டியை தமிழ்நாடு முழுவதும் நடத்தி, சாதனை சரித்திரம் படைத்திருக்கிறார், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே புதிய திராவிட ரத்தத்தை பாய்ச்சி இருக்கிறார் உதயநிதி.
திமுகவிற்காகவும், மக்களுக்காகவும் உழைப்பது மட்டுமே தன் பணி என சுழன்று கொண்டிருக்கிறார். உழைப்புக்கேற்ற உயர்வு மீண்டும் அவரை தேடி வந்திருக்கிறது திமுக உடன் பிறப்புகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பே இப்போது நிறைவேறி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், துணை முதல்வர் என்ற பொறுப்பை ஏற்று இருக்கிறார் உதயநிதி. துணை முதல்வர் என்ற பதவியுடன் முதல்வருக்கு துணையாக இன்னும் பல மடங்கு உற்சாகத்துடன் உழைக்கத் தொடங்கி இருக்கிறார் உதயநிதி.