அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் கைவிடப்படுகிறதா?
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234 ஆவது படம் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப். 235 ஆவது படமாக தெலுங்கு நடிகர் பிரபாஸின் கல்கியும், 236 ஆவது படமாக இந்தியன் 3 ஆகியவை தற்போது இருக்கின்றன.
கமல்ஹாசனின் ‘237’ ஆவது படம் குறித்த அறிவிப்பு 2024 ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. அந்த அறிவிப்பில், இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.
அந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த மற்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. 2025 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது. இப்போது, கமல்ஹாசன் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து கொடுத்து விட்டு அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு சில மாதங்கள் இருப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அங்கிருந்து திரும்பி வந்ததும், பிரபாஸ் உடன் கல்கி படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. சுமார் இரண்டு மாதங்கள் அந்தப் படப்பிடிப்பில் அவர் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து அன்பறிவ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும். அந்தப்படத்துக்காக அலுவலகம் அமைத்து படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா போகும்முன்னர் கமல்ஹாசனை அன்பறிவ் இரட்டையர்களில் ஒருவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது படப்பிடிப்பு தேதி குறித்து கமல்ஹாசன் சொல்வார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், அதுகுறித்து உறுதியாக எதுவும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டாராம். இதனால், இந்தப்படம் நடக்காது என்கிற செய்திகள் உலாவரத் தொடங்கிவிட்டன.
அதற்குக் காரணம், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 3, கல்கி 2, தக் லைஃப் ஆகிய படங்கள் அகில இந்தியப் படங்களாக இருக்கின்றன. அதனால் வியாபாரம் மற்றும் கமல்ஹாசன் சம்பளம் ஆகியன பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இப்போது அட்லி இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருக்கும் படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறார் என்றொரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது. இதுவும் அகில இந்தியப் படமாகவே இருக்கும். தற்போதைய நிலை இப்படி இருக்கும்போது அன்பறிவ் இயக்கும் படம் தமிழ்ப்படமாக மட்டுமே இருக்கும் என்பதால் இதைக் கைவிட்டுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதோடு இனி ராஜ்கமல் நிறுவனம் நேரடியாகப் படத்தயாரிப்பில் ஈடுபடாது என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்து அந்நிறுவனத்தின் தரப்பில் கேட்டால், அன்பறிவ் இயக்கும் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எப்போது படப்பிடிப்பு என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.