முதல்வரைச் சந்தித்து பெருமிதம் அடைந்த இயக்குனர் சீனு ராமசாமி
“மாமனிதன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த சந்திப்பில் இயற்கை சீற்றங்களுக்கு எதிராக முதல்வர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகளுக்கு நன்றி கூறும் விதமாக ஜான் ரீடு எழுதிய “உலகை குலுக்கிய பத்து நாட்கள்”எனும் புத்தகத்தை சீனு ராமசாமி முதல்வருக்கு வழங்கினார்.
இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறும் போது… எனது திரைப்படங்களைப் பார்த்து, ரசித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்து சக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் “ஆண் தாய்” மு. க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. முதலமைச்சரின் வரலாற்று நூலான “உங்களில் ஒருவன்” நூலில் கையொப்பம் இட்டு எனக்கு பரிசாக வழங்கினார் என்று சந்தோஷத்துடன் கூறினார். இந்த சந்திப்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.