சினிமா இருக்கும் வரை திரையரங்குகள் இருக்கும்…
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களின் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ,நடிகர் ஜெய், நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் ஜெய் பேசும் போது… நடிகர் விஜய்யின் படங்களில் சேர்ந்து நடிக்க வேண்டும் என இதுவரை 150 முறைக்கு மேல் அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளேன். ஆனால் நீதான் ஹீரோவாக நடிக்கிறாயே பிறகு எதற்கு என்று சிரித்துக் கொண்டே செல்கிறார். பகவதி படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தேன், மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என சுவாரசியமாக பேசினார்.
நடிகர் சுப்பு பஞ்சு பேசுகையில்… நான் நடிக்க வந்த புதிதில் சின்னத்திரையில் அரிசி தொடரில் கொடூர வில்லனாக நடித்திருந்தேன்.அப்போது பொதுமக்கள் அந்த கேரக்டரை திட்டித் தீர்த்தனர். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் எனது கதாபாத்திரம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. என்னைப் பொறுத்தவரை இப்படித்தான் நடிப்பேன் என்பது கிடையாது. எந்தவித கதாப்பாத்தில் நடிக்கச் சொன்னாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
ஓடிடியில் திரைப்படங்கள் வெளிவருவதால் திரையரங்குகள் காலப்போக்கில் கானாமல் போய்விடும் என சிலர் நினைக்கிறார்கள். எத்தனை புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் திரையரங்குகளில் சென்று படம் பார்க்கும் அனுபவமே தனி , ஆகையால் சினிமா இருக்கும் வரை திரையரங்குகள் இருக்கும் என்றார்.
மாஸ்டர் பட தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ பேசுகையில்.. மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். ஆனால் இன்று பல்வேறு துறைகளில் பயணிக்கிறோம் .அதற்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடல் தான். பெண்களின் முன்னேற்றத்காக நான் எப்போதும் குரல் கொடுத்து வருகிறேன். பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும். அவர்களது திறமைகள் முடங்கி விடக்கூடாது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் விஜய்யை வைத்து படம் தயாரிப்போம் என்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கொளரவித்தனர் .