பன்முக கலைஞர் கவிஞர் பிறைசூடன் மறைவு
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் எழுத்தாளருமான கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார். தமிழ் திரைப்படங்களில் காலத்தால் அழியாத பாடல்களை எழுதியுள்ளார்.
இசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதனால் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமாகி இசைஞானி இளையராஜா உள்ளிட்ட மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளராக சிறப்பாக பணியாற்றி அந்த சங்கத்திற்கு அறக்கட்டளையை துவங்கி பல லட்ச ரூபாய் சேர்த்து வயது முதிர்ந்த உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் பென்சன் வழங்கி வந்தார்.
திரைப்படங்களில் தரமான பாடல்களை எழுதி தனக்கென தனி அடையாளத்துடன் வலம் வருபவர் என முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரால் பாராட்டப்பட்டவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கரங்களால் கலைமாமணி பட்டம் பெற்ற கவிஞர் பிறைசூடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நாராயணீயம் என்னும் ஆன்மீக நூலை எழுதி வெளியிட்டார்.
சினிமா, இலக்கியம், ஆன்மீகம், பட்டிமன்றம், கவியரங்கம் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களிலும் நடுவராக கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் மனங்களை கவர்ந்த கவிஞர் பிறைசூடன் இறப்புச் செய்தி அறிந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வேதனையிடன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் பிறைசூடன் மறைவு தமிழ் திறையிலகினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.